(Source: semparuthi.com) சிலாங்கூர் மாநில அரசின் இந்தியர் பண்பாட்டு மையத்தின் ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரும், அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.
இதன் காணொளியை பார்வையிட இங்கே சொடுக்கவும்.
தேசிய முன்னணி காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு முடக்கப்பட்ட மூன்று இனங்களுக்குமான பண்பாட்டு மையங்களை செயாலாக்கம் காண 2009-ஆம் ஆண்டிலேயே விவாதிக்கப்பட்டதாகவும் அது சார்பாக சரியான நிலங்களை அடையாளம் காண்பதில் கால தாமதம் ஏற்பட்டதாக கூறிய சேவியர், இதற்காக தற்போது 6 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியர் பண்பாட்டு மையத்திற்கு 2 கோடி வழங்கப்படும் என்றார்.
“இதை முழுமையாக மாநில அரசால் செய்ய இயலாது. கண்டிப்பாக இந்திய சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை” என்றவர், இதற்கான ஒரு ஆரம்பச் செயல்திட்ட குழுவை அமைத்துள்ளதாகவும் அதை பொறியிலாளரும் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம் அவர்கள் ஒருங்கிணைத்து செயலாற்றுவதாகவும் கூறினார். இதில் கிள்ளான் நாடளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ மற்றும் செனட்டர் இராமகிருஷ்ணன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
கிள்ளான் KTM ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் புக்கிட் ஜாத்தி சாலை முடிவில், கிள்ளான் நதிக்கரையை ஒட்டி இந்த மையம் அமையயுள்ளது.




